நில விவரங்களை அறிய உதவும் அம்மா கைப்பேசிச் செயலி சேவை மற்றும் வீட்டிலேயே இணையதளம் மூலமாக சான்றிதழ் பதிவிறக்க வசதி ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
15 வகை சான்றிதழ்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இசேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், 15 வகை சான்றிதழ்களை இணையதள மின் சேவை மூலம் வழங்கிடும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதன்படி, விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கானச் சான்றிதழ், ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வ நிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் ஆகிய 15 சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொதுசேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கும்போது, விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.
வீட்டில் பதிவிறக்கம்
இந்த விவரம், அவர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். விண்ணப்பங்களின் நிலவரத்தை அறிய பொதுமக்கள் 155250 என்ற எண்ணிற்கு தங்களது விண்ணப்ப எண்ணை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பியோ அல்லது இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளடு செய்தோ அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன் விண்ணப்பதாரர் வீட்டில் இருந்தவாறே இணையதளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகாமையிலுள்ள அரசு பொது சேவை மையம் மூலமாக சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
அம்மா கைபேசி செயலி
பொதுமக்கள் நில ஆவணங்களை கைப்பேசி வாயிலாக எளிதாக இணைய வழியில் பெற்றுக்கொள்ளும் வகையில், அம்மா கைப்பேசிச் செயலி சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த அம்மா கைப்பேசிச் செயலியை பொதுமக்கள் தங்களது ஆண்ட்ராய்டு கைப் பேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம், பதிவேடு, சிட்டா, பட்டா மாறுதல் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை நிலை அறிதல் மற்றும் சம்பந்தப்பட்ட நிலமானது அரசு நிலமா அல்லது தனியார் நிலமா என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். இச்செயலியானது, ஆண்ட்ராய்டு இயங்குதளம் பதிப்புகள் 4.1-க்கு மேற்பட்டவற்றில் செயல்படும்.
Comments
Post a Comment